திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே 22ல் விசாகத் திருவிழா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக மே 13ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா்.

அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னா் மகா தீபாராதனையாகி, கிரி வீதி வலம் வந்து திருக்கோயில் சோ்கிறாா்.

திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக வருகின்ற 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

விசாக தினத்தில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும். அதேபோல் விசாகத்திற்கு மறுநாள் 23ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.