குலசை தசரா குழு ஆட்டத்தை பார்க்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் கார் மோதி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம்,பெரியதாழை பகுதியைச் சேர்ந்த வெங்கட் ராகவன் (16), 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில், தசரா திருவிழாவையொட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இந்த நிலையில், தசரா ஆட்டத்தைப் பார்ப்பதற்காக வெங்கட் ராகவனும் அவரது உறவினரான சாத்தான்குளத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன் (16) ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இருசக்கர வாகனத்தில் காயல்பட்டினம் ஓடக்கரையில் நடக்கும் தசரா குழு ஆட்டத்தைப் பார்க்கச் சென்று உள்ளனர்.

தசரா ஆட்டத்தைப் பார்த்து விட்டு வீடு திரும்பும்போது, ஓடக்கரை அருகே சாலையில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதில், இருசக்கர வாகனம் மீது மோதியதால் நிலை தடுமாறி எதிரே வந்த கார் மீது இருவர் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கட்ராகவன், ஹரிஹரன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இதனையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.