ஆயுதப்படை காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம்,பேரூரணி காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் பல்வேறு பிரிவுகள் குறித்து இன்று ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டில் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றதில் 515 பேர் கடந்த 01.06.2023 அன்று முதல் தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் ஆயுதப்படை பயிற்சி காவலராக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சி காவலர்களுக்கு இன்று (18.10.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உட்பட பல்வேறு பிரிவுகள் குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பயிற்சி காவலர்களுக்கு மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு உட்பட மேற்படி பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவுரையாற்றி பயிற்சியளித்தார்.