திருச்செந்தூர் சஷ்டி 3ஆம் நாள் விழா: தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ஆம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். முற்பகலில் மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் நடைபெறும். திருவிழாவின் 6ஆம் நாளான சனிக்கிழமை (நவ.18) மாலை கோயில் கடற்கரையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.