தூத்துக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து சுமார் 30 பேர் தென் தமிழகத்திற்கு ரயிலில் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்து அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பிறகு, அங்கிருந்து இரண்டு தனியார் வேனை வாடகைக்கு எடுத்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி- நெல்லை நெடுஞ்சாலையில் நெல்லை நோக்கி கீழ வல்லநாடு துணை மின் நிலையம் அருகில் சென்ற போது எதிரே தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வேன் மீது மோதியதில் வேன் அருகில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் விபத்து நடைபெற்றதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. எனவே பின்னால் மற்றொரு வேனில் வந்த நபர்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவித்துள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டனர். அப்போது வேனில் இருந்த உத்தரப்பிரதேசம் மாநிலம் சாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஒரு வயது குழந்தை ஸ்ரீ உள்பட 16 பேரையும் போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்னர். ஆனால் குழந்தை ஸ்ரீ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். விபத்தில் இறந்த மூன்று பேரின் உடலும் அதே நெல்லை அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது,

விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மாதிரிகளை சேகரித்து சென்றனர். இதற்கிடையில் உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது உடலை இங்கிருந்து எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற்கூறாய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற் கூறாய்வு செய்து உடலை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைஎழுந்துள்ளது.