குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை அழைத்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைந்த குழுவின் ‘புதிய பாதை” என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து, பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் ‘புதிய பாதை” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (14.10.2023) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட அசோக்நகரில் உள்ள ராணி மஹாலில் வைத்து மேற்படி ‘புதிய பாதை” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பளார் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் எந்த சூழ்நிலையிலும், எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பழிக்குப்பழி எண்ணம் மேலோங்கி இருப்பது, கோபத்தை கட்டுபடுத்த முடியாத நிலை, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, பய உணர்ச்சி இல்லாமை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் குற்ற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுவதோடு மட்டுமல்லாமல் குடும்பமும் பாதிப்படையும். அதனால் நம்மை நாம் மாற்றிக் கொண்டாலே நம்முடைய எதிர்காலமும் சிறப்பாக அமையும். நமது உடலை பேணி பாதுகாப்பது நமது கடமையாகும். வாழக்கையில் நமக்கென்று தன்மானம், சுயமரியாதை ஆகியவை இருந்தாலே வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். அடுத்தவர்களை குறை கூறுவது நமது வேலை கிடையாது. தவறு செய்வது மனித இயல்பாக இருந்தாலும் கோபத்தை கட்டுபடுத்தி அந்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் தவறுகள் செய்யாமல் நல்ல மனிதாக இந்த சமுதாயத்தில் வாழ்வது மாமனிதனின் இயல்பு ஆகும். நீங்கள் மாமனிதாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நமக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக முக்கியமாகும். போதை பழக்கத்துக்கு அடிமையாவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மேல் உள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த முகாம் திருந்தி நல்வாழ்வு வாழ்வதற்கான ஒரு முயற்சியாகும். எண்ணங்கள் நல்லதாக இருக்க வேண்டும், ஆகவே நீங்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொண்டு மீண்டும் இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி நல்வாழ்வு வாழ இந்த முகாமை பயன்படுத்தி கொண்டு சிறந்தவர்களாக வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி மனநல மருத்துவர்  சிவசைலம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா மற்றும் வழக்கறிஞர்  செல்வம் ஆகியோர் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த 60 பேர்களுக்கு அடிப்படை மன உளவியல் குறித்தும், கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்தும், போதை பழக்க அடிமைத்தனம் மீட்பு அறிவுரைகள் குறித்தும், குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தனித்தனியாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம், மத்தியபாகம் காவல் நிலை ஆய்வாளர்   அய்யப்பன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்  வின்சென்ட் அன்பரசி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  ராமலெட்சுமி உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.