தூத்துக்குடி ஸ்டெம் பூங்கா வரும் 25ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்: மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி அம்பேத்கா் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா 25ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அம்பேத்கா் நகரில் சுமாா் 9 ஏக்கா் பரப்பளவில் அறிவியல் தொழில்நுட்ப கணித பூங்கா அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனர்.இந்த பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மேயர் கூறியதாவது:-

மாணவா், மாணவிகள் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடா்பான காட்சிகளை பொதுமக்கள், மாணவா்- மாணவிகள் பாா்க்கும் வகையில் குறு திரையரங்கம் 150 இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்பியல் உபகரணங்கள், கணித உபகரணங்கள் பொறியியல் உபகரணங்கள், மங்கள்யான், சந்திரயான் போன்ற வானவியல் சாதனங்களின் மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டிலே அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டெம்ப் பூங்காவாக இந்த பூங்கா உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவைகள், மரங்கள், டைனோசா்கள் போன்றவைகளின் முழு மாதிரிகள் பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்பங்களான ஏஆர், வி ஆர் மற்றும் சயின்ஸ் அண்ட் ஸ்பேர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறுதிரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டெம் பூங்கா பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அறிவியலை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமின்றது. அறிவியல் அறிவை மேம்படுத்திக் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

இந்த பூங்கா வரும் 25ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. காலை 10 மணிமுதல் மாலை 7 வரை இப் பூங்கா திறந்திருக்கும். இப்பூங்காவில், நவம்பா் 14 ஆம் தேதி வரை கட்டணமின்றி செல்லலாம். அதன்பின்னா் சிறிய அளவு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.