தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அலட்சியம்:அறுவை சிகிச்சை கருவியை சுத்தம் செய்த சிறுவன்..

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கருவியை சிறுவன் கழுவிய சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோட்டையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் சர்க்கரை நோய் காரணமாக காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாவது தளத்தில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்ந்துள்ளார் அவரது காலில் இருந்த ஒரு விரல் அகற்றப்பட்டு தொடர்ந்து ஐந்தாவது மாடியில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி நோயாளி பவுல் ராஜிக்கு அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழைய கட்டை அவிழ்த்துவிட்டு புதிய கட்டு போடக்கூடிய பணியை செய்துள்ளனர். அப்போது பயன்படுத்திய கத்தரி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளை பவுல்ராஜின் மகன் சுத்தம் செய்துள்ளான். இந்நிலையில் சிறுவன் சுத்தம் செய்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்;தூத்துக்குடி அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துக்கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
செவிலியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் டேட்டா என்டரி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறனர். நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியினைகூட செவிலியர் பள்ளி மாணவிகள்தான் செய்கின்றனர். மருத்துவர்கள் விசிட் என்கிற பெயரில் பார்வையிட்டு செல்கின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை. உதாரணமாக சிறுநீரக நோய்களுக்கு இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலைதான் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.