தூத்துக்குடி:27பவுன் நகை திருட்டு; கணவன்-மனைவி கைது!

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் வீடுபுகுந்து 27 பவுன் தங்க நகைகளை திருடிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் திருமணி (65). இவர் கனநீர் ஆலையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நேற்று ஊர் திரும்பினார். அப்போது பீராவில் இருந்த 27 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருமணி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து
தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில்
பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளாய்ஸ் மகன் ஜெயந்த் (34) மற்றும் அவரது மனைவி ஆஷா (28) ஆகிய 2பேரும் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்து 27 பவுன் நகையை மீட்டனர்.