தை அமாவாசை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமானோர் தர்ப்பணம் செய்து தங்களின் முன்னோர்களை வழிபட்டனர்.

அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும், அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. அதன்படி தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பிரசித்தி பெற்ற ஜீவன் நதிகளில் ஒன்றாக வழங்கும் தாமிரபரணி நதிக்கரையில் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர். தாமிரபரணி நதியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற படித்துறைகள் மற்றும் தீர்த்தக்கட்டங்களில் முன்னோர்கள் வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை, வண்ணாரப்பேட்டை, சிந்துபூந்துறை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற படித்துறைகளில் பொதுமக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்களின் வருகையை ஒட்டி போலீசாரும் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…