தூத்துக்குடியில் வழக்கறிஞரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் ராஜ்குமார் (42) வழக்கறிஞர்.இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் தனது நண்பர் அனீஸ் (25) என்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் பேச்சிமுத்து (35) என்பவர் அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை பார்த்த ராஜ்குமார், “நீங்கள் யார் என்று தெருவில் உங்களை பார்த்ததே இல்லை” என்று கூறினாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து தனது அண்ணன் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த கத்தியை எடுத்து வந்து வழக்கறிஞர் ராஜகுமார் மற்றும் அவரது நண்பர் அனீஸ் ஆகியோரை கத்தியால் குத்தி உள்ளார்.

இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்கு பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.