தூத்துக்குடி 2ம் கேட் டாஸ்மாக் கடையில் திருடிய கும்பலை சேர்ந்தவர் கைது

தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 25 மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வந்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் அப்பகுதியில் வடமாநில கும்பல் சந்தேகப்படும்படியாக நடமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் இருந்துளளது. இதையடுத்து ரோந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த சென்றனர். அப்போது அந்த கும்பல் இருளில் தப்பி ஓடியது. எனினும் அவர்களை விரட்டிச் சென்ற போலீஸ்காரர், வடமாநில கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராய்சிங் (வயது 30) என்பதும், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து,திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.