தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 72 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள 72 Probationary Clerks பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Probationary Clerks பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புரபேஷனரி கிளர்க் பணியிடங்களுக்கு மொத்தம் 72 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் : ஆந்திர பிரதேசம் (17 இடங்கள்), கர்நாடகா (11), குஜராத் (17), தெலுங்கானா (7), டெல்லி (2), மகாராஷ்டிரா (9), ராஜஸ்தான் (02), அந்தமான் நிகோபர், சத்தீஷ்கர், தத்ரா நகர் ஹவேலி, மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 1 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்கள் இல்லை.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். இது குறித்த விவரங்கள் தேர்வு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 31.08.2023 படி விண்ணப்பதாரர்களின் அதிக பட்ச வயது வரம்பு 24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டம் முடித்தவர்கள் 26 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, பி.சி/எம்.பிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் கட்டாயம் இல்லை.

தேர்வு முறை: ஐபிபிஎஸ் விதிகளின் கிளர்க் பதவிக்கு தேவையான தரத்துடன் தேர்வு நடைபெறும். ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருக்கும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, ஐதராபாத், போர்ட்பிளேர், பெங்களூர், மங்களூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், ரூர்க்கி, குல்பர்கா, ஜெய்பூர், குண்டூர், ராய்பூர், சூரத், புதுடெல்லி, அகமதாபத், லுதியானா, இந்தூர், மும்பை, புனே ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 51,618.00 சம்பளமாக வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ. 6,19,416.00 சம்பளமாக கிடைக்கும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/Clerk.pdf என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 6.11.2023 வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதத்தில் ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.