தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை 24-ம் தேதி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 24.11.2023 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணியானது 27-10-2023 முதல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 04.11.2023 ), 05.11.2023, 25.11.2023, 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள், இந்திய தேர்தல் ஆணையத்தினால் நடத்தப்பட உத்தரவிடப்பட்டதின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள 1622 வாக்குச்சாவடிகளிலும் 04.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

18 மற்றும் 19 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்பு முகாம் 24.11.2023 அன்று நடைபெறவுள்ளது.

1.1.2024 அன்று 18 வயது நிறைவடைந்த/நிறைவடையவுள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் முகவரி, வயதுக்கான அடையாள அட்டை (குடும்ப அட்டை, ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்று) மற்றும் கடவுசீட்டு அளவிலான வண்ண புகைப்படத்துடன் தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. இதர கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் விடுமுறை இருப்பதால் அக்கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் வரும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தினங்களில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மனு கொடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் அல்லது https://voters.eci.gov.in இணைய தளத்தில் அல்லது வாக்காளர் உதவி செயலி (Voter help Line app) ஆகியவற்றின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.