மறைந்த முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் சேவியரின் கனவை நினைவாக்கிய மகன்: சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி அண்ணாமலை வாழ்த்து

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தபோது கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன் சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது;-தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தனது அலுவலகத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அமரர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் மகன், சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், சிவில் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், தனது தந்தை கொலை செய்யப்பட்ட கடினமான நேரத்திலும், அவரது கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து, தனது பெரும் முயற்சியால் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது, தந்தை மீது அவர் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும், இளைஞர்கள் அனைவருக்கும் மாபெரும் உத்வேகமாகவும், அமைந்திருக்கிறது. சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள் பணிகள் சிறக்கவும், நீதித்துறையில் அவர் மென்மேலும் பல உயரங்களை எட்டவும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…