தூத்துக்குடி:டீக்கடைக்கு ரூ.61 ஆயிரம் மின் கட்டணம் விதிப்பு! கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்..

தூத்துக்குடி அருகே டீக்கடைக்கு 61 ஆயிரம் மின் கட்டணம் விதித்த,விவகாரத்தில் மின் கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவர் டீக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு ஒரு மாதத்திற்கு ரூ.61,000 மின் கட்டணம் விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது மின் பயன்பாடு குறித்து முறையான கணக்கீடு செய்யாமல் கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து மின்சார பயன்பாட்டை தவறாக பதிவேற்றம் செய்த கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம் ரூ.61 ஆயிரம் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கான கணக்கு அல்ல என்றும், நான்கைந்து மாதங்கள் வராமல் இருந்த கணக்கு என்றும் தெரிவித்துள்ள அதிகாரிகள், சம்பந்தப்பட்ட டீக்கடை உரிமையாளர் முறையாக கட்ட வேண்டிய மின் கட்டணம் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.