திருச்செந்தூர் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.3.20 கோடி வருவாய்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது. அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் கிடைக்கப்பெற்றுளளது.