முத்தையாபுரத்தில் மாமியாரிடமே 62 பவுன் நகையை திருடிய மருமகள் கைது!

தூத்துக்குடி,முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி(வயது65). இவர் ஸ்பிக்நகர் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் தங்கதுரை (38) சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்தையாபுரத்தில் உள்ள தந்தை வீட்டில் சில நாட்களுக்கு முன்பு மனைவி அஸ்வினி மற்றும் ஐந்து வயது மகளை விட்டுவிட்டு தங்கதுரை சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அற்புதராஜ் தான் நடத்திவரும் பேன்சி கடைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்டு அறிந்து கொண்ட பர்தா அணிந்து கொண்டு வந்த பெண் ஒருவர் வீட்டில் புகுந்து மருமகள் மற்றும் மாமியாரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 62 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?. பர்தா அணிந்து வந்தவர் யார் என்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மருமகள் அஸ்வினி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஸ்வினி தன்னுடைய அக்காவையே பர்தா அணிந்து வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அஸ்வினி ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் சொந்த நகையை அடமானம் வைத்து ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளார். இதன் காரணமாக அவர் நட்டதை சந்தித்துள்ளார். இந்த நிலையில் நகையை மீட்பதற்காக பணம் தேவைப்படுவதால் மாமியாரின் நகையையே கொள்ளையடிக்க மருமகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.