தூத்துக்குடி:ஆத்தூர் அருகே தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியம்!இருவர் பலி..இருவர் படுகாயம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து கோவைக்கு எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து நேற்றிரவு 10 மணியளவில் கிளம்பியுள்ளது. இந்த பேருந்தின் இடது புறம் உள்ள லக்கேஜ் டோர் சரியாக மூடப்படாமல் இருந்ததால் ஆத்தூர் அருகேயுள்ள நரசன்விளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிவனைந்த பெருமாள் மகன் சுப்பையா (வயது 70) என்ற முதியவர் மீது லக்கேஜ் டோர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மேலஆத்தூர் குச்சிக்காடு கந்தசாமி மகன் செந்தில்குமார் (43) என்பவர் தெற்கு ஆத்தூர் பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது அடுத்து மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து தெற்கு ஆத்தூர் கீழத்தெருவை சேர்ந்த சிந்தா மகன் சாகுல்ஹமீது (43) என்பவர் மீது மோதியதில் இடது தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்துள்ளார்.அதையடுத்து வடக்கு ஆத்தூர் உதயம் ஹோட்டல் முன்பு பேருந்து ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மேலஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த பலவேசம் மகள் பிரியதர்ஷினி (23) மீது மோதியதில் தலையில் அடிப்பட்டு அவரும் காயமடைந்தார். இதையடுத்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியது எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் தனியார் பேருந்து என்பதை உறுதி செய்தனர்.

இந்த தொடர் விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுத்தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஆறுமுகநேரி அருகேயுள்ள நல்லூர், நாககன்னியாபுரம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் மகேஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.