லோக்சபா தேர்தலில் வெற்றி பெற 4 பேரிடம் கவனம் செலுத்துங்கள்!: நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை

  • மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மேலும் 10% வாக்குகள் அதிகரிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. அதையடுத்து டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய அலுவலகத்தில் இன்று தேசிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் அவர் பேசுகையில், ‘மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மேலும் 10% வாக்குகள் அதிகரிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். பூத் நிர்வாகத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய நான்கு பிரிவினரை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூற வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புதிய வாக்காளர்களுக்குப் புரிய வைக்க சிறப்புப் பிரசாரம் கூட்டம் நடத்த வேண்டும்.சமூக ஊடகங்களில் முனைப்புடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான கூடுதல் தரவுகளை பகிர வேண்டும்’ என்று பல்வேறு யோசனைகளை வழங்கினார்.