தூத்துக்குடியில் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது..!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 10.12.2023 அன்று நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் மொத்தம் 929 பேருக்கு உடல் தகுதி தேர்வு இன்று (06.02.2024) முதல் வரும் 10.02.2024 வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வு இன்று ஈரோடு சிறப்பு அதிரடிப்படை (Special Task Force) காவல்துறை தலைவர் எஸ். முருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (06.02.2024) 470 விண்ணப்பதாரர்களுக்கும், நாளை (07.02.2024) 459 விண்ணப்பதாரர்களுக்கும் உடற் தகுதி தேர்வு (Physical Measurement Test) நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சிபெறும் விண்ணப்பதார்கள் அடுத்த 3 நாட்களில் நடைபெறும் உடற் திறனாய்வு (Physical Efficiency Test) தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த உடற்தகுதி தேர்வு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்கள் என மொத்தம் 250 பேர் இந்த உடற்தகுதி தேர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896