தூத்துக்குடி மையவாடி பகுதியில் கொத்தனார் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மையவாடி பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை ரோடு பிதாம்பரம் என்பவரின் மகன் சின்னதுரை (40) கொத்தனாராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் குடிபோதையில் வீட்டில் மனைவி மற்றும் மகன்களுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தீபாவளியன்று மனைவியை தாக்கியதால் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆறுமுகநேரியிலிருந்து கிளம்பி முள்ளக்காடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அங்கு வந்த சின்னதுரை மீண்டும் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது 17 வயது மகன், மையவாடி பகுதியில் மதுபோதையில் மயங்கிக் கிடந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.இதையடுத்து தென்பாகம் போலீசார் அவரது மகனை கைது செய்தனர்.