தூத்துக்குடியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை: நண்பர் கைது!

தூத்துக்குடியில் கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் இசக்கிராஜா (24). இவர் கிணறுக்கான உறை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய நண்பர் ராஜீவ்நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் விக்கி (24) என்பவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அவர் தசரா திருவிழாவுக்காக ஊருக்கு வந்து இருந்தாராம். கடந்த 20-ந் தேதி ராஜீவ்நகர் பகுதியில் வைத்து விக்கி, இசக்கிராஜா ஆகியோர் மது குடித்தார்களாம்.
அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விக்கி, அருகில் கிடந்த கல்லால் இசக்கிராஜாவை தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிராஜா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நண்பர் விக்கியை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இசக்கிராஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் சிப்காட் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.