தூத்துக்குடி:மூன்றே நாளில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை- பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த 3வது நாளில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி முருகேசன் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மகன் மாரி செல்வம் (24). இவரும் திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரும் காதலித்து கடந்த அக்-30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் 5பேர் கொண்ட கும்பல் முருகேசன் நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கணவன்-மனைவி 2பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், 2பேர் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., புறநகர் டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்