தூத்துக்குடி;சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் மேற்பார்வையில், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர்  ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்  சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்  அருள் மோசஸ், தலைமை காவலர்  சங்கர் மற்றும் போலீசார் நேற்று (01.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில்  அவர் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த சுடலைமகன் முருகேசன் (62) என்பதும் அவர் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து  போலீசார் முருகேசனை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,05,000/- மதிப்புள்ள 2948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், ஒரு செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.