தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணம்!

தூத்துக்குடி கடற்கரை சாலை தனியார் ஹோட்டல் முன்பிருந்து ‘நடப்போம் நலம்பெறுவோம்” எனும் நோக்கில் 8 கி.மீ. தூரம் சுகாதார நடைபயண இயக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்து கலந்து கொண்டார். இந்த நடைப்பயணத்தில் அமைச்சர் பெ.கீதாஜீவனும் கலந்து கொண்டார்.

பின்னர் உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருதய மருத்துவப் பிரிவு சார்பில் இருதயநோய் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்;இதய நோய் எதனால் வருகிறது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நாம் வாழ்க்கை முறையை எப்படி மேற்கொள்கிறோம் என்பதை பொருத்து இதய நோய் ஏற்படுகிறது. இதயநோய் வராமலிருக்க எண்ணை உணவை தவிர்த்திட வேண்டும், எளிமையாக இருதயத்தை துடிக்க விட வேண்டும் தினசரி உடற்பயிற்சி,நடைபயிற்சி செய்யவேண்டும். நடந்தே உடல் எடையை குறைக்கவேண்டும் என்றார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றார்.


அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் மட்டும் வழங்கப்பட்டுவந்த இதய நோய்க்கான 14 மாத்திரைகள்,தமிழக அரசு கடந்த ஜீன் மாதம் தொடங்கிய இதயம் காப்போம் திட்டத்தில் மாநிலத்திலுள்ள அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகிறது என்றார்.

எட்டு கிலோமீட்டர் தூரம் அமைக்கபடும் நடைபயிற்சி பாதையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் களைப்படையாமல் இருப்பதற்காக சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடப்படும், 2கிலோ மீட்டர் இடைவெளியில் உட்கார்ந்து இளைபாற இருக்கைகள் அமைக்கப்படும் என்றார்.
முன்னதாக நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்திற்காக எட்டு கிலோமீட்டர் நடைபயணம் செய்வதற்கான இடத்தை எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், பொது சுகாதாரம் நோயைத் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் டாக்டர் செல்வநாயகம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.