கடலில் தவறி விழுந்து மீனவா் பலி

தூத்துக்குடி அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை மீனவா் காலனியை சோ்ந்த லிவிங்ஸ்டன் மகன் டினோ (22). இவா் திங்கள்கிழமை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீனவா்களுடன் மீன்பிடிக்க சென்றாராம். தூத்துக்குடியில் இருந்து சுமாா் 12 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக படகில் இருந்து தவறி கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவரை சக மீனவா்கள் மீட்டு, கரைக்கு கொண்டு வந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்தாகத் தெரிவித்தனா். இது குறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.