தூத்துக்குடியில் சோகம்:வீட்டின் அருகே தேங்கி கிடந்த மழைநீரில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி நிக்கோலஸ் மகன் அருள்ராஜ் (45). மீனவர். இவர் வீட்டை ஒட்டி தாழ்வான பகுதயில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அவரது வீட்டின் முன்பும் தண்ணீர் தேங்கி உள்ளது. சுமார் 10 அடிக்கு அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நேற்று முன் தினம் மாலையில் அருள்ராஜ் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்தார். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறியபடி தத்தளித்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருள்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.