திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

திருச்சி மாவட்ட எல்லையில் சனமங்கலம் காப்புக்காடுகள் அருகே பல வழக்குகளில் தொடர்புடைய கொம்பன் என்கின்ற ஜெகன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்த விபரம் வருமாறு; திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மேலத் தெருவை சேர்ந்த கொம்பன் ஜெகன் (எ) ஜெகதீசன். இவன் மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவ்வப்போது சிக்குவதுமுண்டு. கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். சொந்த ஊரில் வான வேடிக்கை முழங்க கார் மீது அமர்ந்து ஊர்வலம் சென்றான். பின்னர் நண்பர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினான்.
இந்த பிறந்தநாள் விழாவில் ஜெகனுடன் தொடர்புடைய பல ரவுடிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 20-ம் தேதி இரவு பிறந்தநாள் விழா விருந்து என அவனது கூட்டாளிகளுக்கு கிடா கறியுடன் ஜெகன் வீட்டில் விருந்து கொடுத்தான். அப்பொழுது அவனது கூட்டாளிகள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் வந்து அந்த விருந்தில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்தனர்.
கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது போலீசார் வாகனத்தில் கண்ணாடியை ஜெகன் தலையில் மோதிகொண்டு பிரச்சனையை கிளப்பியிருக்கின்றான். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகனின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர்களுக்கு விருந்து கொடுத்ததாகவும், மேலும் செலவுக்கு காசு வேண்டுமென்றும் அதற்கு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டு கொண்டிருந்ததாகவும் போலீஸாரிடம் ஜெகன் உள்ளிட்ட கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர், கைது செய்யப்பட்ட 10 பேரையும் திருவெறும்பூர் போலீசார் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளி வந்த கொம்பன் என்கின்ற ஜெகன் திருந்தி வாழ நினைப்பதாக கூறி வந்தாலும், அவனை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருச்சி மாவட்ட எல்லையான காப்புக்காடுகள் நிறைந்த சனமங்கலம் பகுதியில் ஜெகன் இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதிக்கு மணப்பாறை காவல் உதவி ஆய்வாளர் வினோத் தலைமையிலான போலீஸார் விரைந்தனர்.
தனிப்படை போலீசார் ஜெகனை பிடிக்க முயன்றபோது மணப்பாறை காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ஜெகன் தப்ப முயன்றுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ஜெகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் மீது திருவெறும்பூர், லால்குடி உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஜெகனின் உடல் லால்குடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் தற்போது போலீஸார் தடுப்பு வளையம் வைத்து வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியின் பிரபல ரவுடிகளில் ஒருவரான ஜெகன் போலீஸாரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டெல்டா மாவட்டங்களில் உள்ள ரவுடிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.