3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தவறான செய்தி : எஸ்பி பாலாஜி சரவணன் விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தொலைக்காட்சி தவறான தகவல் பரப்பி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் நக்கலக்கோட்டை கிராமத்தில் கடந்த 28.04.2024 அன்று கணபதி அம்மாள் என்பவர் இறந்த இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த உறவினர்களில் ஒரு சிலர் மதுபோதையில் இறுதி ஊர்வலத்தின் முன்பு நடனமாடி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தவாறு சென்றதை மேற்படி கிராமத்தின் தர்ம கர்த்தாவான கந்தசாமி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இந்நிலையில் 30.04.2024 அன்று மேற்படி இறந்த கணபதி அம்மாளின் 3ம் நாள் நிகழ்ச்சிக்கு வந்த கயத்தாறு ஊரைச் சேர்ந்த மஹாராஜா (40), வெள்ளைச்சாமி (29) மற்றும் இளஞ்சிறார் இருவர் உட்பட சிலர் அங்குள்ள சத்திய பவானி என்ற பெண்ணை அவதூறாக பேசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட கந்தசாமி மற்றும் குமார் கண்ணம்மாள் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மேற்படி கந்தசாமி மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், குமார் கண்ணம்மாள் மற்றும் சத்திய பவானி ஆகியோருக்கு சிறிய காயம் என்பதால் சிகிச்சையளிக்கப்பட்டு உடனே வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உடனே எட்டயாபுரம் காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விளாத்திக்குளம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன்  மேற்பார்வையில் எட்டயாபுரம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தனர். இதில் காயம்பட்டவர்கள் 2 பெண்கள் உட்பட 3 நபர்கள், இதில் 2 பெண்களுக்கு சிறிய காயம் என்பதால் சிகிச்சையளிக்கப்பட்டு உடனே வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதை ஒரு தொலைக்காட்சி செய்தி தனது முகநூல் பக்கத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை என ஆங்கிலத்தில் “Tuticorin District : Three persons including two women, were hacked to death due to a dispute over the bursting of fire crackers at a funeral in the Ettayapuram area” என்று குறிப்பிட்டுள்ளது. இது பொதுமக்களிடத்தில் ஒரு பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இதுபோன்று உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.