தூத்துக்குடியில் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி; எஸ்பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (17.02.2024) தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைந்தது.

இப்பேரணியின் போது கிரெடிட் கார்டு சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுபவர்கள், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது நண்பர்கள் போன்று அல்லது பிரபலமானவர்கள் போன்று போலி கணக்குகளை துவங்கி நம்மிடம் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆன்லைனில் பம்பர் பரிசு விழுந்திருப்பதாக கோரி உங்கள் விபரங்களை திருடி அதில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பண மோசடி செய்பவர்கள் மற்றும் தங்கள் நிலம் அல்லது வீட்டின் மீது செல்போன் டவர் அமைத்து தந்து மாத வாடகை அதிக அளவில் தருவதாக கூறி நம்ப வைத்து மோசடி ஈடுபடுபவர்கள் ஆகியோர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் முழக்கமிட்டு சைபர் குற்றம் குறித்து புகார் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண்ணான 1930 பொறித்த பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.

இப்பேரணியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா , தூத்துக்குடி காமராஜ் கல்லூரி துணை முதல்வர் முனைவர் அருணாச்சல ராஜன், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  சோபா ஜென்சி உட்பட காவல்துறையினர் மற்றும் காமராஜ் கல்லூரி, சுப்பையா வித்யலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிரசெண்ட் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…