தஞ்சாவூரில் வங்கி வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி: ரூ.756 கோடி பணம் இருப்பதாக வந்த குறுச்செய்தி!

தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் இருப்பு 756 கோடி ரூபாய் உள்ளதாக வங்கியிலிருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனியார் வங்கி ஒன்றில் அவர் வைத்திருக்கும் அக்கவுன்ட்டிலிருந்து அவருடைய நண்பர் ஒருவருக்கு ரூ.1,000 அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்க்கு வங்கியிலிருந்து ஒரு குறுச்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்த அந்த இளைஞர் இன்ப அதிர்ச்சியடைந்திருக்கிறார். தொடர்ந்து அவர் காலையில் வங்கியில் சென்று கேட்டபோது இது என்ன மெசேஜ் என்று எங்களுக்கு தெரியவில்லை, சோதனை செய்துவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிப்பதாக அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.