காவிரி பிரச்சினை எதிரொலி: கர்நாடகா வழியாக செல்லும் தமிழக லாரிகள் நிறுத்தம்!

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகா வழியாக செல்லும் தமிழக லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கடந்த 18-ம்தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தது.

இந்நிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்ல வேண்டிய லாரிகள் அனைத்தும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இதேபோல் வட மாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரும் லாரிகளும் ஆங்காங்கே பாதுகாப்பாக லாரி ஓட்டுனர்கள் நிறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.