கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி அறிவுறுத்தல்

கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழைக் காலங்களில் தண்ணீா் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு, இருமல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, விலங்குகள் மூலம் பரவும் எலிக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொதிக்க வைத்த அல்லது குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். உணவு தயாரித்த உடனே உண்ண வேண்டும். சேமித்து வைத்து அடுத்தநாள் பயன்படுத்துவதைத் தவிா்ப்பதன் மூலம் உணவு, குடிநீா் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
நோய் பாதிப்பு இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். வயிற்றுப்போக்கால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் உப்பு-சா்க்கரைக் கரைசல் அருந்த வேண்டும். வீட்டைச் சுற்றிய பகுதிகளில் கிடக்கும் தேவையற்ற பொருள்கள் அப்புறப்படுத்தவதன் மூலம் தேங்கும் நீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதைத் தடுக்கலாம்.
தாமிபரணி கூட்டுக் குடிநீா்த் திட்ட ஆதாரங்களான ஆற்றுப் படுகை உறைகிணறுகள் பிளீச்சிங் பௌடரால் சுத்தப்படுத்தப்பட்டு, தொற்றுநோய் பரவாமல் தடுக்க குளோரினேஷன் செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.மேலும், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை களப்பணியாளா்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். சுகாதாரப் பணியாளா்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.