கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் லட்சுமிபதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை (புதியது/FRESH) பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு தமிழக அரசு இலவச கல்வி மற்றும் பள்ளி மேற்படிப்பு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இவ்விவரங்களை https://ssp.tn.gov.in என்ற இணையதளத்தில் 29.12.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இலவச கல்வி உதவித்தொகை;

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களிலும் பாலிடெக்னிக், தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியர்கள் குடும்பத்தில் முதல்பட்டதாரியாகவும் மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை;

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஐடிஐ, டிப்ளமோ, முதுகலை, தொழிற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவ/மாணவியர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்கும்பட்சத்தில் கற்பிப்பு கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் அரசு கல்வி நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை முழுமையாகவும், தேர்வுக்கட்டணம், புத்தகக் கட்டணம் போன்றவையும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

விடுதிக் கட்டணம்;

விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு உண்டி, உறையுள் கட்டணமாக ரூ.400 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.4000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மாணவ/ மாணவியர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student login -ல் பின்வரும் ஆவணங்களின் விவரங்களுடன் உள்ளீடு செய்தல் வேண்டும்.

1. சாதிச் சான்றிதழ் (e-certificate only)

2. வருமான சான்றிதழ் (e-certificate only)

3. முதல் நிலை பட்டதாரி சான்று (இலவச கல்வி திட்டத்திற்கு மட்டும்) (e-certificate only)

4. சுயநிதி தொழிற்கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் அரசு ஒதுக்கீட்டின் (e-Counseling order Copy) இடம்பெற்றதற்கான ஆணை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

5. ஆதார் எண் அட்டை (ம) அத்துடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் விவரம்

6. தேசிய மயமாக்கப்பட்ட / பொதுத்துறை இவற்றுடன் ஆதார் எண் வங்கி கணக்கு எண் IFSC 616001 இணைத்தல் அவசியம். இதனை https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணையதளத்தில் கணக்கு எண் செயல்பாட்டில் உள்ளதையும் உறுதி செய்தல் வேண்டும்.

மேற்படி ஆவணங்களின் நகல்களை தொடர்புடைய கல்வி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை மாணவ/மாணவியர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…