தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை -கணக்கில் காட்டப்படாத ரூ.3.37 லட்சம் பறிமுதல்.!

தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.3.37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி டபுள்யூ.ஜி.சி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் ஒப்பந்தங்கள் வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மாலை தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இருந்த உதவியாளர் ஒருவரிடம் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கணக்கில் வராத பணம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை காரணமாக அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த சோதனை இரவு வரை நீடித்தது.