அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் அறிக்கை!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் “மறைந்த தமிழக முதல்வரும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20, தேதி நாடே திரும்பி பார்க்கும் வண்ணம் நடைபெற்ற அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளில் மூன்று நாட்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெறுகிறது.

அதன்படி வரும் 16ம் தேதி மாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலிலும், 17ம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உடன்குடி அண்ணா திடலில் வைத்தும், 19ம் தேதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் ஏரல் சேர்மன் கோவில் தக்கார்க்கு சொந்தமான இடத்திலும் வைத்து நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தூத்துக்குடியில் குமுதா பெருமாள், நடராஜன் (எ) குறிச்சி சேகர், உடன்குடியில் கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை, தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ் மற்றும் ஏரலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் அனல்பொறி ஆர்.சின்னையா, சங்கரன்கோவில் எம்.கனபதி ஆகியோரும் மேற்கண்ட பொதுக்கூட்டங்களில் நானும் கலந்துகொண்டு பேசுகிறேன்.

இந்த பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.