மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை… மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.