தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்…வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இறுதி வாக்காளர்கள் பட்டியல் வரும் அடுத்தாண்டு ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் என்றும் , தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் 3.10 கோடி பேரும், ஆண் வாக்காளர்கள் 3 கோடி பேரும் உள்ளனர் என்றும் கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ம் தேதி கடைசி நாளாகும். இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.