பசுபதி பாண்டியன் ஆதரவாளரான கோபால் கொலை வழக்கில் 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை…இருவருக்கு 2 ஆண்டு சிறை!

பசுபதி பாண்டியன் ஆதரவாளரான கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்தவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 52). பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் இருந்தநிலையில், காவல் துறையின் ரௌடி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட பிறகு, கடந்த சில ஆண்டுகளாக கரூர் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் என்னும் சொந்த கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் விவசாயம் செய்து வந்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 06 ஆம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு உள்ள விவசாயத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 தனிப்படைகள் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை தொடர்பாக  கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா சரவணன், சுந்தர், ரவிவர்மா என்கின்ற பாம் ரவி, குமுளி ராஜ்குமார், கருப்பு ரவி, மனோஜ், கார்த்தி, ஜெயராமன் சுரேஷ், நந்தகுமார், கருப்பு குமார் ஆகிய 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருப்பு ரவி தவிர பத்து நபர்கள் கைது செய்து பட்டனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.15) மதியம் 1மணியளவில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.கருப்பத்தூர் கோபால் வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா,சரவணன், சுந்தர்,ரவி என்கிற பாம் ரவி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர எஞ்சிய நான்கு நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

வாட்ஸ்-அப் – https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9