தூத்துக்குடியில் பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கலியை பறித்த 2 பேர் கைது

தூத்துக்குடி சத்யாநகர் சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரும் அவரது மனைவி நாகஜோதி (29) என்பவரும் இருசக்கர வாகனத்தில் கடந்த 30.11.2023 அன்று இரவு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாநகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் இவர்களை பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் நாகஜோதி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து நாகஜோதி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்,முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் சாமுவேல், காவலர் . முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தியாகு மகன் அர்னால்டு (23) மற்றும் தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்அனிபா மகன் பின்லேடன் (22) ஆகியோர் இருவரும் சேர்ந்து மேற்படி நாகஜோதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அர்னால்டு மற்றும் பின்லேடன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 4 சவரன் தங்க நகை, திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.