தூத்துக்குடியில் 228 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ஒரே நாளில் 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 13 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 28.08.2023 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியை சேர்ந்த ஞானம் மகன் ஆரோன் (31), தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த அய்யாதுரை மகன் இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான சின்னதுரை மகன் மூக்காண்டி (எ) ராஜா (30), மந்திரம் மகன் அருண்குமார் (27), முனியசாமி மகன் காளீஸ்வரன் (24), ஈனமுத்து மகன் விக்னேஷ்வரன் (29), மாரியப்பன் மகன் திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த ஜான் மகன் சஜின் ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (39) சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சம்பத்குமார் (50) மற்றும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து, 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி (எ) ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, ஆரோனை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 எதிரிகள் உட்பட 137 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.